sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
காரைக்கால் அம்மையார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.240  
திருநின்ற சருக்கம்
 
மானமிகும் அறநெறியின் வழிநின்று, வாய்மை யினின்றும் குறைவு படாத சிறப்பினை உடைய பெரு வணிகர்களின் குடிகள் நெருங்கி விளங்கும் பதி, வளைவுகளையுடைய சங்குகளைக் கடலலைகள் சுமந்து எடுத்துக் கொண்டுவர, அவை மேல் ஏறி அடுத்திருக்கும் கழிக் கானல்களில் உலவுகின்ற வளமிக்க அழகு பொருந்திய காரைக்கால் ஆகும்.
*** மானம் - பெருமை; அஃதாவது எஞ்ஞான்றும் தன் நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமாம்.
தருமம் - 'கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து வீசி' (பட்டினப். வரி 210, 211) என்றும், 'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்' (குறள், 120) என்றும் கூறப்படுகின்ற அறம்.
துவன்றி - நெருங்கி. ஊனம் - குறைவு. கூனல் வளை - வளைவுகளையுடைய சங்குகள்.

மரக்கலங்கள் நிறைந்த கடற்கரையிலுள்ள காரைக்காலில் வாழும் வணிகர் குலத்தலைவராகிய தனதத்தனாரின் தவத்தால், அவரிடத்தில் திருமகள் தோன்றினாள் எனக் கருதுமாறு, மேன்மேலும் மிகுகின்ற பேரழகு பொருந்திய புனிதவதியார் பிறந் தருளினார்.

குறிப்புரை: பொங்கிய பேரழகு - வளர்ந்தமைந்த பருவத்தும் வளர்ந்து மாறியது அன்றி, மேலும் வளர்ந்து செல்லும் அழகு.

வணிகப் பெருமக்களின் குலம் மேலும் விளக்கம் அடையுமாறு இவ்வுலகில் வந்து பிறந்தருளிய பின்பு, அழகு பெருகும் மென்மையான திருவடிகள் தளர்நடை கற்கும் பருவத்தில், பாம்பு களை அணிந்த சிவபெருமான் திருவடிகளில் அடிமை செய்துவரும் தன்மை பெறுதற்கு அடங்காத பேரன்பு மேலோங்க வரும் மொழி களை, அவர் பயின்று வருவாராயினார்.

குறிப்புரை: பணி - பாம்பு. பேசப்பழகும் பொழுதே இறைவனைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிப் பழகிவந்தார் என்பார். 'மனக் காதல் ததும்பவரும் மொழி பயின்றார்' என்றார். 'பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின்சேவடியே சேர்ந்தேன்'(தி. 11 அற்புதத். , 1) என வரும் அம்மையாரின் திருவாக்கை முகந்து நிற்கும் பகுதி இது.

நிரம்பிய நல்ல சுற்றத்தார் அனைவரும் மகிழுமாறு, தொடர்ந்து முறையாகப் பருவங்கள் தோறும் செயத்தகும் சிறப்புகள் எல்லாவற்றையும், செல்வம் மிக்க தந்தையாராகிய தனதத்தனார் மங்கலம் பொருந்தச் செய்துவர, நிறைந்த பெரும் பாராட்டுகளுடனே வளர்கின்றவராகிய புனிதவதியார், ஆனேற்றை ஊர்தியாக உடைய, இறைவரிடத்தில் மிகுந்த அன்புடனே கூடிய அழகின் கொழுந்து வளர்ந்தாற் போல வளர்ந்து வருவாராயினார்.

குறிப்புரை: பருவச் சிறப்பெல்லாம் - தாலாட்டு முதல் நீராடல் வரை பெண்களின் பருவத்திற்கேற்பச் செயத்தகும் செய்கைகள். உயிர் உணர்வாக அமைவது அன்பாம். உடலளவாக அமைவது அழகாம். அம்மையாரின் வரலாற்றில் இளமையிலேயே இறைவனிடத்துக் கொண்ட அன்பு, இறவாத இன்ப அன்பாக வளர்ந்து செல்கின்றது. உடலழகோ ஒருகால எல்லையில், 'இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி' எனக் கழிக்கப்பட்டு உதறித் தள்ளப்படுகிறது. இவ்வுயர்வு கருதியே 'அன்புடன் அழகு' என ஒடு உருபை அன்புடன் சேர்த்துக் கூறினார். 'ஒரு வினை ஒடுச் சொல் உயர்பின் வழித்தே' (தொல். வேற். மயங். 8) என்னும் தொல்காப்பியமும். அல்கிய அன்பு - நிலைபெற்ற அன்பு. 'அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால், அற்குப ஆங்கே செயல்' (குறள், 333) என வருமிடத்தும் இப் பொருள் படுதல் காண்க.

சிறுமியருடன் விளையாடும் விளையாட்டுக் களிலெல்லாம், வளரும் பிறைமதியைச் சூடிய சடையினை உடைய தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானின் திருவார்த்தை களையே வாயில் வருவனவாகப் பயின்றும், அடியவர்கள் வந்தால், அவர்களைத் தொழுதும், இவ்வாறாகத் தோழியர்கள் போற்ற, இணையான மார்பகங்களைக் கொண்டு இருத்தலின் இடையானது வருந்தும் பருவத்தினை அடைந்தார்.

குறிப்புரை: வண்டல் - விளையாட்டு. திருவார்த்தை - இறைவனைப் பற்றியும், அடியவர்களைப் பற்றியும் வரும் புகழுரைகளும் போற்றி யுரைகளும் ஆம். 'பேசத் திருவார்த்தையில் பெருநீளம் பெரும் கண்களே' (தி. 8 திருக்கோவையார், 109) எனவரும் கோவையாரும் காண்க. ஒதுங்குபதம் - மார்பகங்களைத் தாங்கலாற்றாமையால் வரும் தளர்வுடைய பருவம்.

உடல் உறுப்புக்களின் இலக்கணங்களை நன்குணர்ந்த நூலவர், நல்லன என எடுத்துக் கூறுமாறு அமைந்த உறுப்பு நலங்கள் பலவும் நிரம்பப் பெற்றுப், பொருந்திய பேரழகு மேன்மேல் மிகப் பெருக, வளர்கின்ற மாட்சிமையால், வீட்டிலிருந்தும் வெளியே செல்லத் தகாத பருவம் வர, இவர்களின் மரபுக்குப் பொருந்தும் பழங்குடியில் வந்த வணிகப் பெருமக்கள் திருமணம் செய்தற்குத் தொடங்குவாராகி,

குறிப்புரை: உறுப்பு நூலவர் - உடல் உறுப்புக்களின் இலக்கணங் களை அறிந்த நூல் வல்லுநர்கள். வடநூலார் உடலுறுப்புக்களின் நலம் கூறும் நூலை, 'சாமுத்திரிகா லட்சணம்' என்பர். இல்இகவாப் பருவம்- இல்லத்தை விட்டு நீங்கத் தகாத பருவம், பெண்மை நலம் நிரம்பப் பெற்ற பருவம். இப்பருவம் வழக்கில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுவர, ஆசிரியர் சேக்கிழார், பண்பை நிலைக்களனாகக் கொண்ட பருவமாகக் குறித்திருப்பது எண்ணி மகிழ்தற்குரியது.
'முலை முகம் செய்தன, முள் எயிறு இலங்கின காப்பும் பூண்டிசின் கடையும் போகலை பேதை அல்லை மேதையங் குறுமகள்' (அகநா. களிற்-7) எனச் சங்க காலம் முதலே பாதுகாக்கப்பட்டு வந்தது இப்பண்பாம்.

சிறப்புமிக்க கடற்கரைப் பட்டினமாகிய நாகப் பட்டினத்தில், நிதிபதி எனும் பெயருடன் உலகில் பெருமை பெறும் புகழுடைய வணிகன், தான் பெற்ற குலமகனுக்கு ஒத்த மரபில் தேட வருகின்ற குலமரபில் பிறந்த இவ்வம்மையாரை, மணம் நேரும் பொருட்டு மாடங்கள் நிறைந்த காரைக்கால் எனும் வளநகரில் அறிவுடைப் பெருமக்களை வரவிடுத்தனன்.

குறிப்புரை: பாடு - பெருமை. பயந்த - பெற்ற. பின்வரும் வரலாற்றினை நோக்க, அஞ்சிய எனப் பொருள் கோடற்கும் அமைந்தமை எண்ணத்தக்கது. 'தணிவரும் பயமேற் கொள்ள உள்ளமும் தடுமாறெய்தி' (பா. 1746) எனப் பின்வரும் திருவாக்கும் காண்க. இவ்விரண்டு பாடல்களும் ஒருமுடிபின.

அவ்வாறு வந்த மூதறிஞர்கள், மணம் பேச நிற்கும் அழகிய மனையில் புகுந்து, பெண்ணின் தந்தையாராகிய தனதத்தரை அடைந்து, 'நீ பெற்ற பசிய வளையலை அணிந்த பெண்ணை, நிதிபதியின் மகனான பரமதத்தனுக்கு, நம் முன்னோரின் மரபினுக்குப் பொருந்தும் முறையால் மணம் செய்து தருக என்று கூறினார்கள்.

குறிப்புரை: முந்தை மரபு - மணம் செய்தற்கு முன்னும் பின்னு மாகவும், மணவினை செய்யும் முகமாகவும் செயத்தக்க மரபு.
புரிக என்றார் என்றது புரிகென்றார் என நின்றது.

அவ்வுரையைக் கேட்ட தனதத்தனும், மணம் நேரு தற்குரிய முறைமையை எண்ணி, மனம் இசைந்து, அவர்களை அனுப்ப, சென்ற அப்பெருமக்களின் உரைகேட்ட நிதிபதியும், உயர்வும் சிறப்புமுடைய அம்மணமே நிகழ்ந்துவிட்டது போல் மகிழ்ந்து, தன் ஒப்பற்ற மைந்தனுக்குச் செப்பம் நிறைந்த சுற்றத் தாருடன் கூடி, மகிழ்ந்து மணத்திற்குரிய செயல்களைஎல்லாம் செய்யத் தொடங்கினான்.

குறிப்புரை: முறைமையினால் மணமிசைந்து - பெண்கொடுத்தற்கு முன் எண்ணத்தகும் முறைமைகளை எல்லாம் எண்ணி இசைந்து. பிறப்பு, குடிமை முதலாகத் தொல்காப்பியர் கூறும் (தொல். மெய்ப் - 25) பத்துவகைத் தகுதிகளையும் ஒப்ப எண்ணி என்பது கருத்து.
உயர்சிறப்பு - மணம் நிகழ்ந்த சிறப்பு. மணத்துக்கு இசைந்தனர் எனக் கேட்ட அளவிலேயே மணமே நிகழ்ந்தது போல் எண்ணினன் என்பது கருத்து.

பெண்வீட்டார் மணம் இசைந்ததனால் மண மகனின் பெற்றோரும், திருமணநாள் குறித்த ஓலையை அவர்களுக்கு அனுப்பியபின், திருமணநாளும் கூட, திருமணச் செயலுக்குரிய எல்லாவற்றையும் பொருந்த அமைத்து வைத்து, கொத்தாகப் பொருந்திய மலர் மாலையை உடைய மணமகனையும் மணக் கோலத்திற்குரிய அணிகளால் அழகுபெறச் செய்து, தொகுதியாக மண இயங்கள் முழங்கக் காரைக்கால் நகரில் புகுந்தனர்.

குறிப்புரை: பணை முரசம் - மணத்திற்குரிய பல்வேறு வகையான இசைக் கருவிகள்.

இவ்வாறு காரைக்காலை அடைந்த மணமகனும் தாய் தந்தை முதலான சுற்றத்தார்களும், வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்த தனதத்தனாரின் அழகு பொருந்திய மாடத்தின் உள்ளே புகுந்து, மணவினை ஆற்றுதற்குரிய முறைமையினைக் கூறும் நூல்களில் கூறியவாறே, மணத்தின் முன் செயத்தகும் செயல்களை யெல்லாம் செய்து முடித்து, தளிர் போன்ற திருவடிகளையும், மென்மையான புன்முறுவலையும், மயில்போன்ற சாயலையும் உடைய புனிதவதியாரை, மாலையணிந்த காளை போன்ற பரமதத்த னுக்கு மகிழ்ச்சி பொருந்திய சுற்றத்தார் போற்றத் திருமணம் செய்வித்தார்கள்.

குறிப்புரை: அளி - வண்டு. மயிலைக் காணின் காளை மருளும்; அது போல இவ்வம்மையாரைக் கண்டு பரமதத்தனும் மருள இருப்பது இவ்வரலாற்றில் பின்விளைவாகக் காணக்கிடப்பதாம். அந்நிகழ்வை முன்கூட்டி அறிவிப்பார் போல 'மயிலை. . . . . . . . காளைக்குக் கலியாணம் செய்தார்கள்' என்றார்.

மங்கலமாகிய திருமணத்தின் பின் செய்ய வேண்டிய பிற செயல்களையும் முடித்து, மனையறம் பூண்டு வாழும் நாளில், தனதத்தன் தங்கள் குடிக்குப் புனிதவதியார் ஒரே மகளாராக இருக்குங் காரணத்தால், தம்மைப் பிரிந்து ஒலிமிகுந்த கடல்சூழ்ந்த நாகப்பட்டினத்திற்கு அவர் போகாமல், கணவனுடனே அக் காரைக் காலிலேயே இருந்து இல்லறம் நடத்த, தம் இருக்கையின் அருகே அழகிய மாடம் ஒன்றை அமைத்தான்.

குறிப்புரை: தனதத்தன், தன்குடிக்கொரு மகளாகப் புனிதவதியார் இருத்தலின், கணவனின் இருப்பிடத்திற்கு அனுப்பாமல், தம்மூரி லேயே இல்லறத்தை மேற்கொள்ளுமாறு செய்தான்.
அவ்வாறு கருதிய தனதத்தனும் தன்னுடனே இருக்க எண்ணாது அவர்களுக்கெனத் தனிமனை அமைத்து இருக்கச் செய்தது எண்ணத்தக்கது.

தன் மகளை மணம் செய்து கொடுத்ததனால் மகிழ்ச்சி மீதூர இருக்கும் தனதத்தன், தம்பால் உள்ள அளவற்ற செல்வங்களைக் கொடுக்க, ஏற்ற ஒப்பற்ற பெருஞ்சிறப்பினை உடைய நிதிபதியின் மகனாய பரமதத்தனும், மிக்க பெருவிருப்பினால் அம் மனையில் தங்கித், தம்குல மரபிற்கேற்ப வாணிகம் புரிந்து, அத் துறையில் மேன்மை பெற்று விளங்கினான்.

குறிப்புரை: கொள்கை - வாணிகம்.

அவ்விடத்து அவன்தன் இல்வாழ்க்கைக்கு அரிய துணையாய் விளங்குகின்ற அழகிய கூந்தலையுடைய புனிதவதியார் தாமும், சினமுடைய ஆனேற்றை ஊர்தியாக உடைய இறைவனின் திருவடிக்கீழ் மீதூர்ந்த அன்பு பொருந்திய பெருவிருப்பு இடையறாது நாளும் பெருக, மனையறத்தின் மாண்பு வழுவாது அதனைச் செய்து வருவாராய்.

குறிப்புரை: இறைவன்பால் அன்பும், மனைத்தக்க மாண்பும் இடையீடின்றிப் பெருக இல்லறத்தை நடத்தி வந்தார் என்பது கருத்து. பொருவிடை - பொருதற்குரிய சினமுடைய ஏறு. 'சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங், கோதிலா ஏறாம் கொடி' (தி. 8 ப. 19 பா. 10) எனவரும் திருவாசகமும் காண்க.

எவ்வுயிர்களும் விரும்புதற்குரிய சிவ பெருமானின் அடியவர்கள் தம் இல்லத்திற்கு வரின், அவர்களுக்கு நல்ல திருவமுதினை அளித்தும், செம்பொன்னும், நவமணிகளும், வளமான சிறந்த ஆடைகளும் முதலான பொருள்களைத் தகுதி அறிந்து தம் அன்பினால் தொடர்ந்து அவ்வடியவருக்குக் கொடுத்தும், தேவர்க்குத் தலைவனாகிய சிவபெருமான் திருவடியின் கீழ் வைத்த உணர்வு மேன்மேலும் பெருகுமாறு ஒழுகிவரும் நாள்களில்.

குறிப்புரை: நம்பர் - சிவபெருமான்: எவ்வுயிர்களும் விரும்புதற் குரியராதல் பற்றி நம்பர் என்றார்.
'நம்பும் மேவும் நசையாகும்மே' (தொல். உரி. 31) என்னும் தொல்காப்பியமும்.

தான் ஏற்ற மனையறத்திற்கும் வாணிகத்திற்கும் ஏற்ற நெறிமுறைகளில் வாழ்ந்து வரும் பரமதத்தனிடம், அவனைக் காண வந்த சிலர் இரு மாங்கனிகளைக் கொடுக்க, அவற்றைப் பெற்றுக் கொண்ட அவன், அவர் விரும்பும் குறைகளை நிறைவேற்றிக் கொடுத்துப் பின், 'இம்மாங்கனிகள் இரண்டையும் இல்லத்தில் கொடுக்க' என்று சொன்னான்.

குறிப்புரை: தம்குறை முடிப்பாரிடத்தும், மேலோரிடத்தும் யாதானும் ஒருகையுறை கொடுத்துக் காண்டல் பண்டைய வழக்கம். அவ்வகையில் கொடுக்கப்பட்ட கனிகளை அவர் குறை முடித்த பின் தன் பணியாளர் வழித் தன் இல்லத்திற்குக் கொடுத்தனுப்பினான்.
இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

இவ்வாறு கணவன் அனுப்பிய இரு மாங்கனி களையும், கையில் பெற்றுக் கொண்ட நறுமணம் பொருந்திய மலர் களை அணிந்த கூந்தலையுடைய புனிதவதியார், அவற்றை ஓரிடத்தில் வைத்ததன் பின், படத்தையுடைய பாம்பினை அணிந்தருளும் சிவ பெருமானின் அடியவர் ஒருவர் உண்ணும் விருப்பத்தோடு அவர் திரு மனையுள் புகுந்தார்.

குறிப்புரை: பணம் - படம்.

நான் மறைகளையும் அருளிய பெருமானின் மெய்யடியாரின் நிலையினைக் கண்டு, 'சிவபெருமானின் அடியவ ராய இவர்தம் பசியைத் தீர்ப்பேன்' எனச் சென்று, அவர்தம் திருவடி களை விளக்க நீரை முன்னர்க் கொடுத்து, உண்கலமாகிய இலையை இட்டு, தம் பிறவியைத் தீர்க்கும் நல்விருந்தாகக் கொண்டு, இனிய உணவை ஊட்டுவாராகி.

குறிப்புரை: பரிகலம் - உண்கலமாகிய வாழையிலை. உண்மை யான அடியவர்களுக்கு உணவளிப்பது, பிறவிப் பிணிக்கு மருந்தாதல் பற்றி 'ஏதம் தீர் நல் விருந்தாய்' என்றார்.

நறுமணம் பொருந்திய தாமரை மீது இருக்கும் திருமகளை ஒத்த புனிதவதியார், அது பொழுது கறியமுது உதவாத நிலையில் திருவமுது மட்டும் செய்யப்பட்டிருக்க, ஆனேற்றையுடைய இறைவனின் அடியவரே தேடிப் பெறுதற்கரிய விருந்தாக இங்கு வருவாரானால், இதன் மேலும் பெறத்தக்கதொரு பேறு இல்லை எனும் கருத்தினராய், அவ்வடியவர் அமுது செய்வதற்குரிய செயலை ஏற்பாராய்,

குறிப்புரை: அடியவர் மனைக்கு வந்த நேரம் காலையும் நண்பகலுமன்றி இடைப்பட்ட நேரமாகும். ஆதலால் அதுபொழுது திருவமுது மட்டுமே செய்யப்பட்டிருந்தது. கறிவகைகள் பக்குவப் படுத்தப்படாமல் இருந்தன. இந்நிலையில் இறைவனின் அடியவர் வர அவருக்கு உடன் அமுதூட்டும் பெருவிருப்பு ஏற்பட்டமையின் இவ்வாறு கருதினார்.

கணவனால் இல்லத்தில் வைக்கவெனக் கொடுக் கப் பட்டுத் தம்மிடத்திருந்த நல்ல மணம் பொருந்திய மாங்கனிகள் இரண்டில் ஒன்றைக் கொண்டு, மிக விரைந்து வந்து இலையில் படைத்து, மகிழ்ச்சி மீதூர, துன்பத்தைத் துடைத்தருளும் அவ் வடியவர் தமக்கு அமுதுசெய்வித்தார்.

குறிப்புரை: வல்விரைந்து - மிக விரைந்து. இல்லாள் என்பதற்கு ஏற்ற ஆண்பாற் பெயர் இல்லாளன் என்பதாகும். இல்லான் என ஒரோவழி வரினும், நேரிய ஆண்பாற் பெயர் ஈதேயாம். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

மூப்பினால் வருகின்ற அத்தளர்ச்சியினாலும், முதிர்ந்து, விரைந்து, உணவுகொள்ளும் விருப்பத்தை எழுவிக்கும் வயிற்றுத் தீயாய பசியின் நிலையினாலும், அயர்ச்சியுற்று அங்கு வந்த மைந்த திருத்தொண்டர், வாய்ப்பாக அமைந்ததும் மென்மையானதும், சுவை பொருந்தியதுமான அவ்வுணவை மாங்கனியோடு இனிது உண்டு, மலர்கள் அணிந்த மென்மையான கூந்தலையுடைய அம்மை யாரது அன்பு மிக்க விருதோம்பலைப் பாராட்டிப் போயினார்.

குறிப்புரை: முடுகிய - விரைந்த.

அந்நிலையில் அவ்வடியவர் போன பின்பு, அம்மனைக்குத் தலைவனாய பரமதத்தன், பொருந்திய நண்பகற் பொழுதில், நலத்தானும் வளத்தானும் சிறப்புற்று விளங்கும் தனது பெரிய இல்லத்திற்கு வந்து, முன்னம் பொலிவு பெற நீராடி, உட்புகுந்து, உணவினை விரும்பி உண்ண, கற்பினை உடைய மனையாராகிய அம்மையாரும் உணவை உண்பிக்கும் முறையில் உண்பிப்பாராகி.
குறிப்புரை: மனைப்பதி - மனைக்குரிய தலைவன், இல்லாளன். பகற் பொழுதில் வந்து நீராடி எனவே காலைப் பொழுதில் நீராடாது சென்றமை புலனாகிறது. இதனால் முறையான இறைவழிபாட்டு நெறி அவனிடத்து இல்லாமை பெறப்படுகின்றது. அன்றி, முப்போதும் நீராடி உண்பான், பகற் பொழுதிலும் நீராடினான் எனில், அத்தகைய பத்திமை நெறி அவன்பால் இன்மை, வரலாற்றால் விளங்கிக் கிடத் தலின் அவ்வாறு கோடற்கில்லை. கடப்பாட்டில் ஊட்டுதலாவது, செய்யவாய் இடையிடையே முகமனுரை இன்னமுது செவியூட்ட, அவன் விருப்பறிந்து உணவு படைத்து மகிழ்வதாகும். 'தான் துழந்தட்ட தீம்புளிப் பாகர், இனிதெனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே' (குறுந். முல்லை - 167) எனவரும் சங்கப் பாட்டும் காண்க.

இனிய உணவைக்கறிவகைகளுடன் வைக்கும் முறையில் வைத்ததன் பின், சிறப்புப் பொருந்திய கணவன் தான் முன்பு மனையிடத்து அனுப்பிவைத்த நல்ல சுவைமிக்க மாங்கனிகளில் எஞ்சியிருந்த ஒன்றை, நறுமணம் பொருந்திய கூந்தலையுடைய அன்னத்தை ஒத்த மனைவியார் தாமும், கொண்டு வந்து இலையில் இட்டனர்.

குறிப்புரை: எய்தும் முறை - காய்கறி வகைகளை இலையில் வைக்கும் முறை. இவ்விரண்டு பாடல்களும் ஒருமுடிபின.

மனைவியார் தாம் கொண்டு வந்து கலத்தில் (இலை) வைத்த மிகுந்த இனிமை வாய்ந்த அம்மாங்கனியை உண்ட சுவையினால், அதனை உண்ணும் விருப்பம் நிறைவு பெறாமையின், மாலையணிந்த வணிகனாகிய பரமதத்தன், இக்கனி போல்வதொரு பழம் ஒன்று இன்னும் உளது; அதனையும் இடுக, என்று கூற, அப் பழத்தைத் தாம் கொண்டு வரச் செல்வார் போல அவ்விடத்தினின்றும் நீங்கினார்.

குறிப்புரை: மதுரம் - இனிமை. இனிய கனிகளுள் ஒன்றைச் சுவைத்து அருந்திய பரமதத்தன், எஞ்சிய கனியைத் தன் மனைவியார் அருந்தச் ெசய்வதே அறமாகும்; இல்வாழ்வான் இயல்பும் ஆகும். ஆனால் இப்பெருமகனின் இயல்போ இச்சிறிய அறப்பண்பைக் கூடத் தெரியாதிருந்தது ஓராற்றான் வருந்துதற்குரியதே, எனினும் பிறிதோ ராற்றான் இப்பெருமகனின் அறியாமையே அம்மையாரின் அருள் நலத்தை வெளிப்படுத்தவும், அதன் வாயிலாக இறைவனின் இன்னருட் பேற்றைப் பெறவும் காரணமாயினமையின் இதுவும் திருவருட் குறிப்பென்றே கோடல் வேண்டும். கைகேயியின் 'இரக்கம் இன்மையன்றோ இவ்வுலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே' (கம்ப. அயோத். மந்தரை, 86) எனக் கம்பர் அருளுவதும் நினைவு கூர்தற்குரியதாம்.

தன் கணவனார் உணவருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு அயலாகச் சென்று நின்று மனம் தளர்வார், அதுவன்றி அங்கு அரிய கனியைப் பெறுதற்கு வேறு என்செய்வார்? தம்மையும் மறந்து, நினைந்து, துன்பம் உற்றவிடத்து வந்து உதவியருளும் ஆனேற்று ஊர்தியராகிய சிவபெருமான் திருவடிகளைத் தம் மனத்தில் பொருந்த வைத்து, திருவருள் உணர்வே உணர்வாகக் கொண்டு உணரும் அளவில், அப்பெருமானின் திருவருளால், தாழ்ந்த கூந்தலை யுடைய, அம்மையாரது திருக்கையினிடத்து மிக இனிமை பொருந்திய தொரு மாங்கனி வந்து பொருந்தியது.

குறிப்புரை: தம் கணவனார் பிறிதொரு மாங்கனியைக் கேட்டதுமே அதைக் கொணர்வார் போற்சென்றவர், பிறிதொரு மாங்கனி இன் மையின் மனம் தளர்தல் அன்றி வேறு என்ன செய்யமுடியும்? என ஆசிரியர் வினா வடிவில் கேட்டருள்வது, அம்மையார் தம் கணவர் மீது வைத்திருந்த அயராஅன்பினையும் அவன் கேட்டவாறு கனியை இட இயைந்த அன்பையும் காட்டுவதாகும். உற்றவிடத்து - துன்பம் வந்துற்றவிடத்து. திருவருள் வயத் ததாக வந்த கனி ஆதலின் 'அதிமதுரக்கனி' என்றார். அதிமதுரம் மருந்துப் பொருள்களில் ஒன்றாம். அது, நீர்வேட்கையைத் தவிர்க்க வல்லது. ஈண்டு அச்சொற்குறிப்பால் இக்கனியை உண்ட வணிகன் இப் பெருமாட்டியோடு வாழும் இல்லறவேட்கையைத் தணிக்கவும் வாயிலாயிற்று என நயம் காண்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

இவ்வாறு தம் கையகத்து வந்திருந்த மாங்கனியைக் கொண்டு வந்து மகிழ்ச்சியுடன் இடுதலும், அதனை உண்ட அளவில், அதனிடத்துப் பொருந்திய சுவையானது அமிழ்தத் தினும் மேலாக இருக்க, 'இது முன்பு நான் தந்த மாங்கனிகளில் ஒன்று அன்று; மூவுலகிலும் பெறுதற்கரிய கனியாகும் இது, இதனைப் பெற்றது வேறு எங்கு? என்று அம்மையாரைக் கேட்டனன்.

குறிப்புரை: கனியினும் கட்டிபட்ட கரும்பினும் இனியன் இறைவன். அவன் அருள்வழிப்பட்ட கனியாதலின் அக்கனியின் சுவையும் மூவுலகிலும் பெறுதற்கரியதாயிற்று.

அத்தகைய சொல்லைக் கேட்டதும் அம்மையார், தம்பால் அருளினையுடையராய இறைவர் தமக்குச் செய்த பேரருள் திறனைப் பிறரிடத்துச் சொல்லத் தக்கதன்று எனும் கருத்தால், அதனைச் சொல்லவும் மாட்டாதவராய், எஞ்ஞான்றும் நிலை பெற்றிருக்கும் கற்பு மேம்பாட்டால், கணவன் கேட்ட மெய்ம்மையான வினாவிற்கு உரிய விடையைக் கூறாது பொய் கூறுதல் அறனன்று என அதனைச் சொல்லாது விடுக்கவும் மாட்டாராய் இவ்விருவகையானும் கவருற்ற நிலையில், ஒருபால் படாது வருந்துவாராயினர்.

குறிப்புரை: கைவருகற்பு - தம்முடன் பழகிவந்த கற்பு; நிலைபெற்ற கற்பு. உரை காவாமை - கணவனார் கேட்ட வினாவிற்கு உண்மையைச் சொல்லாமை. மெய்வழியன்று - உண்மையான நெறியன்று. விளம் பல் விட மாட்டார் - உரை செய்யாது விடவும் மாட்டார்.

எவ்வாறாயினும் உண்மையை உரைப்பதே கடமையாம் எனத்தகும் சீலத்தால், கருமைபொருந்திய கழுத்தினை உடைய பெருமானின் சிவந்த அடிகளை மனத்துட் பொருந்த வணங்கி, பெறுதற்கரிய கனியை அளித்தார் யார் எனக் கேட்ட கணவனாருக்குச், செறிந்த பூக்களை அணிந்த கூந்தலையுடைய அம்மையார் நடந்ததை நடந்தவாறே கூறினார்.

குறிப்புரை: 'புகுந்தபடிதனை மொழிந்தார்' என்றார், அவ்வுரை தானும் அம்மையார் கூற வல்லதன்றி, தாம் கூற வல்லது அன்று என்பது கருதி. இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

இறையருளால் பெற்றகனி என அம்மையார் கூறக்கேட்ட இல்லத்துக்கு உடையவனாகிய கணவன், அச்செய்தியில் தெளிவு பெறாதவனாய், மணம் பொருந்திய தாமரை மலரில் எழுந் தருளியிருக்கும் திருமகளை ஒத்த அம்மையாரை நோக்கி, 'இக்கனி ஒளிபொருந்திய சடையினையுடைய சிவபெருமானின் திருவருளால் பெற்றது உண்மையாயின், இன்னமும் குற்றமற்ற இது போன்றதொரு கனி ஒன்றை அவர் அருளால் அழைத்துத் தருவாயாக!'எனக் கூறினன்.

குறிப்புரை: தேசு - ஒளி.

அதுகேட்டு, அவ்விடத்தினின்றும் அகன்ற அம்மையார், பாம்பினை அணியாக அணிந்து நிற்கும் சிவபெரு மானை வணங்கி, 'இவ்விடத்து இன்னுமொரு கனியதனை அளித்து அருள் செய்யீராயின் என்சொல்பொய்படும்' என வேண்ட. மாங்கனி ஒன்று திருவருளால் அவர் கையகத்து வந்து பொருந்துதலும், அக்கனியைத், தன் கணவன் கையில் கொடுத்தலும், அவனும் அதிசயித்து அதனை வாங்கினன்.

குறிப்புரை: பாங்கு - இடம்; கணவன் உணவருந்திய இடம்.

வாங்கிய வணிகனும் தன்கையில் இருந்த மாங்கனியைப்பின்பு காணாதவனாகித் தணிதலில்லாத அச்சம் மீதூர, மனம் தடுமாறி, அழகிய கூந்தலையுடைய அம்மையாரை மானுடர் அல்லாத வேறொரு தெய்வம் என்று கருதி, அவரை விட்டு நீங்க வேண்டும் என்ற துணிவுடன், அதனை அங்குள்ள எவரிடத்தும் சொல்லாதவனாய், அம்மையாரிடம் உடல் தொடர்பின்றி, வாழ்ந்து வரும் நாள்களில்.

குறிப்புரை: அணங்கு - தெய்வம்.

இத்தகைய அம்மையாரை விட்டு நீங்குதலே துணிவு என எண்ணி, அதற்கேற்ற முயற்சியைச் செய்வானாய், 'அலைகளையுடைய கடல்மீது கப்பலைச் செலுத்திச் சென்று, பெருஞ் செல்வத்தைக் கொண்டு வருவேன்' என்று சொல்லவே, நெருங்கிய அவன் சுற்றத்தவராகிய குற்றமற்ற சிறப்பினை உடைய வணிகப் பெருமக்களும் மரக்கலத்தைச் செய்வித்தார்கள்.

குறிப்புரை: இவ்வாறு கலத்திற்சென்று பொருளீட்டி வருதல் பண்டைய மரபேயாம். இவ்வாறு பிரிதலைக் கலத்திற் பிரிவு என்று கூறும் தொல்காப்பியம். காலிற் பிரிவு கொள்ளாது, கலத்திற் பிரிவு கொண்டது, மனைவியை விடுத்துச் செல்லுவதற்கேயாம். என்னை? 'முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை' (தொல். அகத். 34) என்பது இலக்கணமாதலின், மரக்கலம் சமைப்பித்தார்கள் எனவே, கப்பல் கட்டும் தொழில் வல்லமை நம் தமிழர்பால் பண்டு தொட்டே இருந்தமை விளங்கும்.

மரக்கலத்தைக் கட்டுவித்து முடித்து, அதனைச் செலுத்துதற்குரிய மீகாமன் முதலிய தொழில் தெரிந்தாருடனே தான் வாணிபம் செய்ய இருக்கும் நாடுகளில் விரும்பும் பண்டங்களில் தாம் ஏற்றிச் செல்வதற்கு ஏற்பவற்றை நிரம்ப ஏற்றிக் கொண்டு, கடல் தெய்வத்தை வழிபட்டு, வாணிகத் தலைவனாகிய அவ்வணிகனும் நல்ல நாளில் கப்பலில் ஏறி, குளிர்ந்த அலைகளை உடைய கடற் செலவை மேற்கொண்டான்.

குறிப்புரை: கம்மியர் - கப்பல் செலுத்துவோர். அவ்வாறு செலுத்துங்கால் இடையில் அதற்குப் பழுது நேரின் அதனைச் செப்பனிடுதற்கும், உடன் இருந்து பற்பல தொழில்களைச் செய்தற்கும் உரிய அனைவரும் அடங்கக் 'கம்மியர்' என்றார். தாம் செல்லும் இடங்களில் அவர்கள் விரும்புகின்ற பண்டங்களை ஏற்றிச் செல்லு தலே இனிமையும் எளிமையுமாக வாணிகஞ் செய்தற்கு ஏதுவாம். அப்பண்டங்களிலும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்பனவற்றையே எடுத்துச் செல்ல வேண்டுமாதலின் 'பொருந்துவ நிரம்ப ஏற்றி, என்றார். சலந்தரு கடவுள் - கடல் தெய்வம். வருணன் - 'வருணன்மேய பெருமணல் உலகம்' (தொல். அகத். 5) என்னும் தொல்காப்பியமும்.

கடலின் மீது கப்பலை ஓட்டித் தான் எண்ணிய நாட்டில் சேருமாறு செலுத்தி, அங்குச் சென்று, அவ்விடத்தில் அளவற்ற பல வாழ்க்கை வளங்களையும் ஏற்படுத்திக் கொண்டு, இவ்வகையில் இடையில் சில நாள்கள் செல்ல, மீண்டும் அக்கப்பலில் ஏறி நீர் நிரம்பிய பாண்டி நாட்டில் ஒரு கடற்கரைப் பட்டினத்தின் பக்கத்தைச் சார்ந்தான்.

குறிப்புரை: எனவே, தான் வாழ விரும்பிய இடத்திற்குச் செல்லுமுன், இடையில் ஒரு நாட்டிற்குச் சென்று தனக்கு வேண்டிய வளங்களை யெல்லாம் தேடிக்கொண்டு, பின் பாண்டிநாட்டிற்குச் சென்றனன் எனத் தெரிகிறது. அவ்வாறு இடையில் சென்ற நாடுகள் வங்காளம், மியான் மார் போன்ற நாடுகளாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). நிறைவாகச் சென்று தங்கிய இடம் தூத்துக்குடி, இராமேசுவரம், குலசேகரப் பட்டினம் ஆகியவற்றுள் ஒன்றாகலாம் என்றும் அவர் கூறுவர்.

குறிப்பிட்ட அந்நகரத்தை அடைந்த அவ்வணிகன், தான் கொண்டு வந்த பலவகைப் பொருள்களால் கொண்ட ஒப்பற்ற பெருநிதியங்களை எல்லாம் ஒருங்கு திரட்டி, அதனைத் தன் வாழ்வின் வைப்பாக வைத்து, உண்மையான புகழ் விளங்கும் அவ்வூரவர் விரும்ப, ஒரு வணிகன் பெற்ற சொலற்கரிய நலம் வாய்ந்த பெண்ணொருத்தியை வளம் பெருகத் திருமணம் செய்து கொண்டான்.

குறிப்புரை: ஒருவழிப் பெருக உய்த்தலாவது, திரட்டிய பலவகைப் பொருள்களாகிய பொன், மணி, வெள்ளி முதலிய பொருள்களை யெல்லாம் சேர்த்து, இனித் தான் வாழ்வதற்கு ஏற்ப, விளைநிலம், மனை, ஏனைய வாணிகத்துறை என இவைமுதலாகிய ஊதியம் பெறும் நிலைகளில் ஒரு முகமாக அமைத்துக் கொள்ளுதலாம்.

பெறுதற்கரிய செல்வத்தைப் பெற்ற அப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், முன்பு புரிந்த கருமணலின் ஒழுங்கு போன்ற நறுமணம் பொருந்திய மென்மையான கூந்தலையுடைய தெய்வம் போன்ற புனிதவதியாரிடத்துத் தான் செய்த வஞ்சனை, புறத்தில் ஒரு சிறிதும் வெளிப்படாதவாறு மறைத்து வைத்த மனத்தோடு, ஏனைய எல்லாவற்றிலும் முறைமை திறம்பாது வாழ்ந்து, முகமலர்ச்சியுடன் வாழ்ந்து வரும் நாளில்.

குறிப்புரை: அற்றம் - வஞ்சித்து ஒழுகிய ஒழுக்கம்; முன் மணந்த மனைவியார் ஒருவர் உள்ளமையும், அவரிடத்துத் தெய்வத் தன்மை கண்டு அஞ்சி அப்பெருமாட்டியாரிடத்து, நிதி பெருக்க அருங்கலத்திற் பிரிவு மேற்கொள்வதாகச் சொல்லிவந்த பொய்ம்மையும் ஆகிய செயல்களாம்.

நறுமணம் வீசுகின்ற சோலைகளையுடைய பழமை யாகிய அவ்வூரில், தலைமைபெற்ற பெருவணிகர்களுடன் கூடி, குபேரனைப் போலப் பொருந்திய செல்வத்தால், மிகுந்த அலைகள் ஒன்றொடொன்று மோதும் கடலில் கப்பல்களைச் செலுத்தி வாணிகம் செய்து புகழ்படைத்த அவ்வணிகன், தன் மனைவியிடத்துப் பெருகிய ஒளி நிறைந்த விளக்குப் போல ஒரு பெண் மகவை அரிதாகப் பெற்றான்.
குறிப்புரை: இருநிதிக் கிழவன் - பெருஞ்செல்வத்திற்கு உரியவன்; குபேரன். 'இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டாண் டகவையான்' (சிலப்ப. மங்கலவாழ்த். வரி 34) என்னும் சிலம்பும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இத்தகைய பெண்மகவைப் பெற்ற அவ்வணிகன், மங்கலம் பெருகப் பெயரிட எண்ணி, தான் முன்பு உடனுறைதலை அஞ்சி, நீத்து வந்த ஒப்பற்ற பெருமை பொருந்திய மனைவியாரை, அவர் தம்மொடு மேலும் தொடர்பு கொள்வதை நீக்க, நிறைந்த தெய்வத்தன்மை பொருந்திய தொழுதற்குரிய தன்மை உடையார் அவர் என்று துணிந்து, பெயர் வைத்தற்குரிய செயற்பாடுகளைச் செய்து, புனிதவதியார் என்ற பெயரைத் தம் விருப்பம் பொருந்திய பெண் மகவின் பெயராகச் சூட்டினான்.

குறிப்புரை: தொடர்வு அற - அம்மையாரொடு மேலும் இல்லறத் தொடர்பு கொள்ளுதலினின்றும் நீங்க. திருவருளால் இரண்டாவது முறையும் மாங்கனி பெற்ற பொழுதே தன்னளவில் இனி அவர் மனைவியாகார் எனக் கொண்டிருந்த நினைவு, இப்பெயரிட மேலும் நிலைபெற வேண்டுமென நினைந்தமையால் ,'தொடர்வற நினைந்து' என்றார்.

இவ்வகையில் இவ்வணிகன் இங்கு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனனாக, இப்பால் நீண்ட அழிவற்ற பெருமதில் கள் சூழ்ந்த மாடங்களையுடைய, காரைக்காலில் வாழும் தனதத்தனின் மகளாராகிய அம்மையாரும், நிலைபெற்ற கற்பின் திறத்தால் இல்லறம் நடத்தி வர,

குறிப்புரை: கன்னிமாமதில் - நிலையான பெருமதில்; கன்னித் தமிழ் என்புழிப்போல. சமாதியணி.

வாணிபத்தால் வளம் பெருக்கக் கப்பலில் இவர்ந்து சென்ற பரமதத்தன், புகழ்வளரும் பாண்டி நாட்டில் ஒரு பெரு நகரில் தங்கிச், செல்வ வளம் பெருக்கி, அங்கு நிலையாக அமர்ந்திருப் பதை, ஒளிபொருந்திய மணிகளையுடைய, ஒப்பற்றதொரு கொம்பு போன்ற அம்மையாரின் உறவினர்கள் கேள்வியுற்றனர்.
குறிப்புரை: விளைவளம் - வாணிபத்தால் விளையும் வளம். அமர்ந்து இனிது இருந்தான் என்பது வாழ்க்கைத் துணையோடு இருந்தான் என்னும் குறிப்புத்தோன்ற நின்றது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அத்தகைய சொற்களைக் கேட்டவுடனேயே அம்மையாருடைய சுற்றத்தார்களும், தமக்குப் பொருந்திய உறவினர் களில் சிலரை விடுத்து, அவ்வணிகனின் உண்மை நிலையைத் தாமும் கேட்டு, துன்புற்ற மனத்தராகி, பின்பு அவன் இருக்கும் இடத்தேயே, பருத்த மார்பகங்களை உடைய அம்மையாரை அழைத்துச் சென்று விடத்துணிந்தனர்.

குறிப்புரை: அவ்வணிகன் இல்லறம் ஏற்றிருக்கும் நிலையால் வருந்தினராயினும், அவன் இருக்கும் இடத்தேயே மனைவியாராகிய அம்மையார் இருப்பதும் பொருத்தம் எனக்கருதியது, அவர் தம் உள்ள நிலையையும் அக்கால வாழ்க்கை நிலையையும் காட்டுவ தாகும். நேர்முகமாகவோ அல்லது நீதிமன்றம் மூலமாகவோ வழக் கிடத் துணியாது, அவனிருக்கும் இடத்தில் அம்மையாரை இருக்கச் செய்தலே அறம் எனக் கருதியது, அவர்களின் அரிய பண்பைக் காட்டுவதாகும்.

மிக்க அழகு பொருந்திய சிவிகையில், மடப்பம் பொருந்திய நடையினை உடைய மயில் போன்ற அம்மையாரைத், தாமரை இருக்கையில் வீற்றிருக்கும் ஒப்பற்ற திருமகள் என ஏற்றிக் கொண்டு, விரும்புதற்குரிய திரைச் சீலையை அச்சிவிகையில் சூழக்கட்டி, விருப்பம் பொருந்திய சுற்றத்தார்களும் மாதர் கூட்டமும் சூழ, நெடுநாள்கள் நடந்து சென்றனர்.

குறிப்புரை: கழனி - திரைச் சீலை. உள்ளிருப்பாரின் உருத்தெரி யாது இருத்தற்குத் திரைச் சீலை கொண்டு மறைத்துச் செலுத்தினர்.

இவ்வாறு சில நாள்கள் நடந்து சென்றவர்கள், செந்தமிழ்த் திருநாடாகிய பாண்டிய நாட்டைச் சேர்ந்து, யாண்டும் பரந்து நிற்கும் புகழினையுடைய பரமதத்தன் இருக்கும் பட்டினத்தின் பக்கம் வந்து, ஒப்பற்ற குலமுதல்வியாரைக் கொண்டு வந்து சேர்ந் திருக்கும் தன்மையை, அழிவற்ற கீர்த்தியையுடைய அவர் தம் கணவனாருக்குத் தெரிவிக்குமாறு சிலரை அனுப்பினர்.

குறிப்புரை: 'சிலபகல் கடந்து சென்று' எனவே அவ்வணிகன் சென்று வாழ்ந்திருக்கும் நகரம் முற்கூறியவாறு போலத் தரைவழிச் செல்லும் தகையதாதலும் விளங்கும். சேர்ந்திருக்கும் நகரம் 'பலர் புகழ்ப் பரமதத்தன்' மாநகர் என்றது, அவன் தன் வாணிகத்தானாய வளத்தையும், 'தொலைவில்சீர்க் கணவன்' என்றது, அவன்தன் முதலாவது வாழ்க்கைத் துணைவியாராய புனிதவதியாரால் ஆய சிறப்பையும் குறித்து நிற்பனவாம்.

அவ்வாறு வந்தவர்கள், தனது நகரை அணுகிய தனைக் கேட்டதும், பரமதத்தனாகிய வணிகனும், மனத்தில் அச்சம் கொண்டு, செழுமையான திருமணச் செய்கையுடன் பின்னால் செய்து கொண்ட மனைவியையும் பெற்றெடுத்த பெண் மகவையும் கொண்டு, 'அவர்கள் என்னிடம் வருமுன் நானே அவர்பால் செல்வேன்' என்று கருதிய வண்ணம், அவ்வம்மையாரிடம் வந்தான்.

குறிப்புரை: அவர்கள் வந்ததைக் கேட்ட பரமதத்தன், அச்சமுற் றதும், தன்குடும்பத்தோடு முந்துறச் சென்று தானே காணச் சென்றதும் அவன்தன் உள்ளக் கிடக்கையையும் உயர்ந்த பண்பையும் காட்டி நிற்கின்றன.

வந்த வணிகன் தானும், அழகிய அம்மனைவி யோடும் தளர்நடைப் பருவம் சார்ந்த பெண் மகவினோடும், இளமை யான பெண்மானைப் போல் நிற்கும் மனைவியார் அடிகளை வணங்கி, 'நான் உமது அருளால் வாழ்வேன், பெற்ற இக்குழந்தைக்கும் முன்னர்த் தங்களிடத்துக் கண்ட தகவால், உமது பெயரைச் சூட்டியுள் ளேன்' என்று கூறியவாறு அவர் முன் பணிந்து வீழ்ந்தனன்.

குறிப்புரை: 'அடியில் தாழ்ந்தே' என்றது, நின்றவாறு வணங்கிய முதல் வணக்கமாகும். 'என்று முன் பணிந்து வீழ்ந்தான்' என்றது நில முறப் பணிந்த இரண்டாவது வணக்கமாகும். 'தளர் நடை மகவு' எனவே குழந்தை பிறந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு ஆகலாம் எனத் துணியலாம். வரலாற்று நிகழ்வைக்காணின் அம்மையாரைப் பிரிந்த ஓரிரு ஆண்டுகளிலேயே பொருள் வளம் பெருக்கி மணம் செய்தி ருக்க வேண்டும் என அறியலாம். திருமணமாகி நீண்ட ஆண்டுகள் செல்லுதலன்றித் திருமணம் ஆன அணிமைக் காலத்திலேயே இரண் டாவது மனைவியார் கருவுற்று இருக்க வேண்டும். இவ்வகையா லெல்லாம் எண்ணிப் பார்க்கும் பொழுது, அம்மையாரைப் பிரிந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பின்பே இவ்வகையில் அவரைக் கண்டிருக்கலாம். எனவே தொலைத் தொடர்புகளும், ஊர் விட்டு ஊர் செல்லுதலும் மிகுதியாக இல்லாத அமைதியான அக் காலத்து இவ்வகையான அமைப்பு நேர்ந்துள்ளது என்பதை அறியலாம். பான்மையால் - உண்மைத் தெய்வமாகக் கொண்ட தன்மையால்.

கணவனார் தம்மை வணங்கிடக் கண்ட அழகிய பூங்கொடி போன்ற புனிதவதி அம்மையாரும், அருகில் நின்ற சுற்றத்தாரிடத்து அச்சம் மீதூர ஒதுங்கி நிற்பத், தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் இச்செய்கைகளைக் கண்டு நிற்கும் சுற்றத்தார்களும் நாணமுற்று, மணமிகுந்த மாலையணிந்த பரமதத்தனே! நீ உன் அழகிய மனை வியை வணங்குவது என்னவோ? என்று வியப்புறக் கேட்டனர்.

குறிப்புரை: காமர் - அழகிய

வணிகனும், மற்று அவ்வாறு வினவிய சுற்றத் தாரைப் பார்த்து, 'இவர் மானுடப் பிறவி அல்லர், நன்மையும் பெருமை யும் பொருந்திய தெய்வமேயாவர் என்பதை நான் அறிந்து நீங்கி வந்தபின்பு, பெற்ற இக்குழந்தைக்கும் அவர் பெயரையே இட்டேன், ஆதலால் அவருடைய அழகிய திருவடிகளை வணங்கினேன். நீவிரும் அவ்வாறே வணங்குதல் செய்மின்' என்றனன்.

குறிப்புரை: மானுடம் - மனிதப்பிறப்பு.

என்று இவ்வாறு வணிகன் சொல்ல, அதனைக் கேட்ட சுற்றத்தார்களும், இன்னதென்று தெளியவாராத நிலையில் அதிசயித்து நின்றார்கள். மணம் பொருந்திய கூந்தலையுடைய அம்மையாரும் வணிகன் கூறிய சொற்களைக் கேட்டு, கொன்றை அணிந்த நீண்ட சடையினையுடைய சிவபெருமானின் ஒலிக்கின்ற கழலினை அணிந்த திருவடிகளைப் போற்றி, மனம் ஒன்றிய அகநோக்கின் மீதூர்வால் உரைசெய்வாராகி.

குறிப்புரை: குரைகழல் - ஒலக்கின்ற சிலம்பையுடைய திருவடி.

இவ்விடத்து இவ்வணிகன் குறிக்கொண்ட கொள்கை இதுவாகும். இனி இவன் பொருட்டுத் தாங்கி நிற்கும் அழகு பொருந்திய தசைகளாலாய உடற்பளுவை இங்குக் கழித்துவிட்டு, உன்னிடத்து அவ்வுலகில் நின் திருவடிகளைப் போற்றுகின்ற பேய் வடிவத்தை அடியேனுக்கு நன்மை பொருந்த அருள வேண்டும் என்று இறைவனுடைய திருவடியை வணங்கி வேண்டினர்.
குறிப்புரை: திருமணமான பெண்கள், கணவன் உடனிருக்கும் வரையிலேயே தம் உடலழகினைப் போற்றிப் பேணுவர். அவன் தன்னைவிட்டு நீங்க நேரின் அவ்வழகினை விரும்பார். உலகியல் வழிப்பட்ட பெண்கள் இந்நிலையினராயின், அருள் வயப்பட்ட அம்மையாருக்கு அந்நிலை கூறவும் வேண்டுமோ? ஆதலின் அவ் வழகும் உடலும் சுமையாக அமைந்தன. 'பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை?' (குறள், 345) எனத் திருவள்ளுவரும் கூறுதல் காணலாம். பேய் வடிவு - தசைகள் நீங்கிய எலும்புடம்பில் உயிர்க் காற்று ஒன்றுமே நிலவியிருக்கும் நிலை. இது வினைவயப் பட்டும், பிறவுயிர் களுக்குத் தீங்கிழைத்தும் வாழும் ஏனைய பேய் வடிவங்களின் வேறாய நிலையதாம். இறைவனின் திருவடிகளைப் போற்றி வாழும் பொற்பு டைய வடிவாம். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

இவ்வாறு வணங்கி நின்ற பொழுது, மன்றுள் ஆடிவரும், கூத்தப் பெருமானின் திருவருளினாலே, மேலாய நெறியை அடையும் உணர்வு மீதூர, தாம் வேண்டிய அதனையே பெறுவாராய், உடம்பில் தசையும் அதன்வழி வெளிப்பட்டு நிற்கும் அழகும் ஆகிய இவற்றையெல்லாம் உதறி, எலும்பே உடம்பாக வானுலகம் மண்ணுலகம் எல்லாம் வணங்கத்தக்க பேயாகிய சிவகணத்துள் ஒன்றாம் நிலைமையைப் பெற்றார்.

குறிப்புரை: 'பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்,' (தி. 11 அற்புதத். 11)என அம்மையார் பின்னர் அருள இருத்தலின், பேயாகிய சிவகணத்துள் ஒன்றாகும் நிலையென விளக்கப் பெற்றது.

எங்கும் தெய்வத் தன்மை வாய்ந்த மலர்மழை பொழிந்தது. தெய்வதுந்துபி முழக்கம் உலகெலாம் நிறைந்து பெருகத் தேவர்களும் முனிவர்களும் ஒருங்கு கூடி மகிழ்ந்தனர். சிவகணங்கள் அனைத்தும், ஆடலும், பாடலும் நிகழ்த்தி அகமகிழ்வு பெற்றன. முன் இருந்த எண்ணற்ற பல சுற்றத்தார்களும் தொழுது, அஞ்சி அங்கு நின்றும் அகன்றனர்.

குறிப்புரை: வானதுந்துபி - இறையருள் வெளிப்படும் பொழுது முழங்கும் ஒரு வகைக் கருவி. இஃது இயக்குவோரின்றித் தானே முழங்கும் தகையது. குணலை - மகிழ்ச்சி மீதூரப் பாடி ஆடும் ஒருவகைக் கூத்து.

உள்ளிருந்து எழுந்த ஞானத்தினால் உமையொரு கூறனாகிய சிவபெருமானை வணங்கி 'அற்புதத் திருவந்தாதி' எனும் அரிய நூலை அதுபொழுது அருளிச் செய்வாராகி, 'அழகிய சிவந்த திருவடிப் போதுகளைப் போற்றுகின்ற நல்ல சிவபூத கணங்களுள் நானும் ஒன்றானேன்' என விரும்பிப்பாடி.

குறிப்புரை: உற்பவித்து - உள்ளத்தின் உள்ளே தோன்றி. ஞானத்து ஒருமை - ஞான மிகுதியால் அறிவு, அறிபவன், அறியப்படுவோன் என்ற நிலையன்றிச் சிவமேயாகிச் சிந்தித்தல். அற்புதம் - திருவரு ளிலேயே திளைத்து நிற்கும் அரிய பேறு. 'யானே தவமுடை யேன்'(தி. 11 அற்புதத். 7), 'உண்டே எனக்கு அரிய தொன்று' (தி. 11 அற்புதத். 10), 'எந்தையார்க்கு ஆட் செய்யப் பெற்ற இது கொல்லோ, சிந்தையார்க்குள்ள செருக்கு' (தி. 11 அற்புதத். 79) என்றெல்லாம் இவ்அந்தாதியில் அருளுவது காண்க. 'பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்' (தி. 11 அற்புதத். 86) என்றார் அம்மையார். பொற்புடைச் செய்ய பாதபுண்டரீகங்கள் போற்றும் பொற்பால் நற்கணம் என்றார் என இவ்வரிய தொடருக்குச் சேக்கிழார் விளக்கம் காணும் அருமையும் எண்ணற்குரியதாம்.

சிவபெருமானின் நுண்ணிதான கீர்த்திகளைக் கூறும் இரட்டை மணிமாலையினையும், அந்தாதித் தொடை அமையப் பாடி, பொருந்திய பேருணர்வு மேன்மேலும் எழுதலால், மும்மதில் களையும் முன்னாளில் அழித்தவராகிய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் உயர்ந்த கயிலாய மலையினை அடைதற்குரிய பேரருள் கூடுதலால், அதனை அடையத் தக்க வழியை நினைந்து வந்தார்.
குறிப்புரை: ஆய்ந்த - நுணுகிய. கட்டளைக் கலித்துறையும் வெண் பாவுமாக இரு வகையாப்பிலமைந்த சொல்மாலையாதலின் இரட்டை மணிமாலை எனப் பெயர் பெற்றது. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

தம்மைக் கண்டவர்கள் வியந்து அச்சம் பொருந்த அவ்விடத்தினின்றும் ஓடுவார்களாகி நின்ற பேயாய வேடத்தின் தன்மையை, உலகினர் தாம் தாமும் கண்டவாறே சொல்லிக் கேட்கி னும், தேவர்களுக்கெல்லாம் தலைவனாய பெருமான் என்னை அறிவாராகில், இவ்வுலகினர்க்கு யான் எவ்வடிவைத் தாங்கினால் என்ன? ஒன்றுமில்லை என்பாராய்.

குறிப்புரை: எனக்கு அருளும் பெருமான் என்னை அறிவர். அங்ஙனமாகப் பிறர் அறியில் என்? அறியாது ஒழியில் என்? எனும் பெருமிதத்தோடு அம்மையார் செல்வாராயினார். 'மத்தமனத்தொடு மால் இவன் என்னமனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊரூர் திரிந்து எவரும் தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே' (தி. 8 ப. 5 பா. 3) எனவரும் திருவாசகப் பகுதியையும், 'பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் நீ ஒன்றும் செய்யாது நில்'(திருவருட்பயன், 77) என வரும் ஞானநூற்கூற்றையும் நினைவு கூர்க

வட திசையிலுள்ள தேயங்களை எல்லாம் மன வேகத்தினும் விரைந்து சென்று, மாலையென மலரும் கொன்றை மாலையை அணிந்தும், கையில் சூலத்தை ஏந்தியும், நின்றருளுகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் பேரொளிப் பிழம்பாக விளங்கும் திருக் கயிலையின் அருகு சென்ற அம்மையார், மேலும் காலால் நடந்து செல்லுதலை விடுத்துத் தலையால் நடந்து சென்றார்.

குறிப்புரை: இதழி - கொன்றை. அது மலருங்கால் மாலையெனத் தோற்றமளிக்கும் ஆதலின் 'தொடை அவிழ் இதழி' என்றார். சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருமலையின் அருகே காலால் நடத்தல் தக்கதன்று எனக் கருதியவர், தலையால் நடந்து செல்ல லானார். தலையால் நடத்தலாவது, தலைதாழ இருகைகளையும் தரையில் ஊன்ற வைத்து நடப்பதாம். நாவரசர் கைத்தொண்டு செய்த இடம் திருவதிகையென நினைந்து அதனை மிதிக்க அஞ்சி, அருகிருந்த சித்த வடமடத்தில் சுந்தரர் வதிந்ததும், அம்மையார் தலையால் நடந்த இடம் திருவாலங்காடு என நினைந்து அதனை மிதிக்க அஞ்சி, அதன் புறத்தே சம்பந்தர் தங்கியதும் அவரவர் தம் வரலாற்றால் அறியப்பட்டனவாம். அவை இங்கு நினைவு கூர்தற்குரியன.

தலையினால் நடந்து சென்று பெருமான் எழுந் தருளியிருக்கும் கயிலை மலையின் மேல் ஏறும் பொழுது, மகிழ்ச்சி மீதூர்வினால் அன்பு மேன்மேலும் பெருக, இளம் பிறையாகிய மாலையை அணிந்த வில்லைப் போன்ற நெற்றியினை உடைய இறைவனின் இட மருங்கில் அமர்ந்திருக்கும் பார்வதியம்மையின் திருக்கண் பார்வை அப்பொழுது பொருந்தியது.

குறிப்புரை: அம்மையார் மலையின் மீது ஏறும் பொழுது உமையம்மையாரின் திருக்கண் நோக்கம் அவர்மேல் பட்டது. 'புலைய னேனையும் பொருளென நினைந்துன் அருள்பு ரிந்தனை, புரிதலும் களித்துத் தலையி னால்நடந் தேன்விடைப் பாகா சங்கரா' (தி. 8 ப. 23 பா. 2) எனவரும் திருவாசகப் பகுதியும் இங்கு நினைக்கத் தக்கது.

வரும் அம்மையாரை நோக்கிய பார்வதி அம்மையாரும், தம் திருவுள்ளத்தில் வியப்புக் கொண்டருளி, விரும்பித் தம் பெருமானை நோக்கி, எம் பெருமானே! தலையினால், நடந்து இங்கு ஏறிவரும் ஓர் எலும்புடம்பு பெற்ற இவ்வடிவின் அன்பு என்னே! என்று கேட்க, நம் தலைவியாகிய அம்மைக்கு இறைவரும் அருளிச் செய்வாராய்,

குறிப்புரை: தாழ்ந்து - வணங்கி.

'உமையே! எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவள். மற்றும் இப்பேய் வடிவாம் பெருமை பொருந்திய வடிவத்தையும் நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்' என்று கூறிய அளவில், அவ்வம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.
குறிப்புரை: வரும் இவர் யாரெனக் கேட்ட உமையம்மையாருக்கு இறைவன் 'அம்மை காண்' என்றருளியதும், பின் அப்பெருமாட் டியார் அருகில் வந்தணைய, 'அம்மையே' என்றருளியதும் அப்பெரு மாட்டியை உலகமெல்லாம் 'அம்மை' என்று அழைப்பதற்குக் காரண மாயிற்று. செம்மையொரு மொழி - செம்பொருளை அடைதற்குரிய ஒப்பற்றதொரு மொழி. எனவே காரைக்காலம்மையார் எனும் பெயரை நினைந்தும் சொல்லியும் வழிபட்டும் வரச் சிறப்பென்னும் செம்பொருள் காணலாம் என்பது கருத்து. பெருமாட்டியார் அருளிய இரு பிரபந்தங்களும் இரு பதிகங்களுமாய நான்கனுள், மூன்றில், தம்மைப் பேயென்றே குறித்துக் கொள்வதும், சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் (தி. 7 ப. 39 பா. 4) 'பேயார்' என இவரைக் குறித்தருள்வதும் கொண்டே 'மற்று இப் பெருமை சேர் வடிவும் வேண்டிப் பெற்றனள்' என்றார் ஆசிரியர்.

இறைவன் அம்மையே! என்று அருளிச் செய்ய, அம்மையாரும் 'அப்பா' என்று தாமரை மலரனைய அழகிய திருவடிகளில் விழுந்து எழுந்தவராகிய அவரை, சங்கினால் ஆகிய வெள்ளிய குழையை அணிந்த இறைவனும் எதிர் நோக்கி, 'இவ் விடத்து நம்மிடம் நீ வேண்டும் வரம் யாது? என்றருள,' அவரும் வணங்கி நின்று சொல்வாராகி.

குறிப்புரை:

என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், 'இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்' என்று வேண்டினார்.

குறிப்புரை: இறைவனை அடைதற்கு அன்பே முதற்கண் வேண்டு தலின் 'இறவாத இன்ப அன்பு வேண்டும்' என முன்னதாக அதனை வேண்டினார் 'வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை' என்பதால் அடுத்துப் 'பிறவாமை வேண்டும்' என்றார். பிறத்தலும் பிறவாமையும் அவ்வவ்வுயிரின் வினைவயத்தவாதலின் அவ்வினைவழி, 'மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்' என்றார். 'மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்' (தி. 8 ப. 1 வரி 32) என்பதால் உயிர் நிறைவாகச் சேர்தற்குரிய புகலிடம் இறைவனின் திருவடியே யாதலின் 'இன்னும் வேண்டும்' என ஆராமை தோன்ற வேண்டி, உன்னடியின் கீழ் என்றும் இருக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துக் கொண்டார்.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அவ்விண்ணப்பத்தைக் கேட்டருளி, தம்மைப் போற்றி வருகின்றவர்களுக்குப் பற்றுக் கோடாய் நிற்கும் இறைவர், தமது திருவடிக்கண் இருக்கும் பேற்றினை வழங்குவாராய், விளக்க முடைய தென்திசையில் எப்போதும் அழியாத வாழ்வைத் தரும் பழையனூர் என்னும் பழம் பதியில் உள்ள திருவாலங்காட்டில், நாம் ஆடுகின்ற பெருங்கூத்தைக் கண்டு, எப்பொழுதும் மகிழ்வுடன் கூடி எம்மைப்பாடிக் கொண்டு இருப்பாயாக! என்று அருளினார்.

குறிப்புரை: கூடுமாறு - தன்திருவடிக்கண் கூடுமாறு.

தாம் வேண்டியவாறு அருளைப் பெற்றவராகிய அம்மையாரும், நான்மறைகளின் முடிவாக என்றும் நிலைத்து நிற்பவர் என்று போற்றப்பெறும் இறைவரிடம் விடைபெற்றுக் கொண்டு, வணங்கிச் சென்று, சொலற்கரிய பேரன்பினால், விளங்கு கின்ற திருவாலங்காடு எனும் நல்ல திருப்பதியைத் தலையினால் நடந்துசென்று, கோயிலுள் புகுந்து, அப்பெருமானின் திருமுன்பு அடைந்தனர்.

குறிப்புரை: இறைவனின் திருக்கூத்தை என்றும் பெற்று நிற்கும் பதியாதலின், அதனைக் காலால் மிதிக்க அஞ்சித் தலையால் நடந்து வந்து அடைந்தார்.

இவ்வாறு வந்தடைந்த திருவாலங்காட்டில், மேலுள்ள அண்டங்களைப் பொருந்த நிமிர்ந்து ஆடுகின்ற திருக் கோலத்தைக் கண்டபொழுது 'கொங்கை திரங்கி' எனத் தொடங்கும் மூத்த நற்பதிகத்தை, எவ்வுயிர்க்கும் தாம் வாழ் முதலாய் இருப்பது அன்றித் தமக்கு ஒரு வாழ்முதல் இல்லாத இறைவரின் திருமுன்பு பாடி, உலகெலாம் விரும்பிப் போற்றிவரும் திருக்கூத்தினைத் தொழுது வாழுகின்ற நாளில்.

குறிப்புரை: மூத்தபதிகம் - தேவாரத் திருப்பதிகங்கள் எனப் போற்றப் பெறும் பின்னர் எழுந்த பதிகங்களுக்கெல்லாம் இதுவே மூத்தது ஆதலின், இது 'மூத்த நற் பதிகம்' (தி. 11 பிரபந். 2) என் றழைக்கப் பெறுவதாயிற்று.

நறுமணம் கமழ்கின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் திருக்கூத்தினை, அவர் திருமுன்பே வணங்கிப் போற்றும் நற்பேற்றால் பொங்கியெழும் விருப்பம். மேன் மேலும் எழ, வியப்பெய்தி 'எட்டி இலவம் ஈகை' எனத் தொடங்கி முழவம் கொட்டக் குழகன் ஆடும் எனும் நிறைவுடைய திருப்பாட்டுக் களாலாய திருப்பதிகம் ஒன்றையும் அடுத்துப் பாடினார்.

குறிப்புரை: 'எட்டியிலவம்' (தி. 11 பிரபந். 3) எனத் தொடங்கும் திருப்பாடலின் முதலும் இறுதியுமாகவுள்ள தொடர்களை முகந்து ஆசிரியர் அருளிச் செய்திருக்கும் திறம் எண்ணி மகிழ்தற்குரியதாம். இவ்வகையில், அம்மையார் அருளிச் செய்திருக்கும் நான்கு திருப் பதிகங்களுள், முன்குறித்த (பா. 1767, 1768) இருபிரபந்தங்களும் கயிலை செல்லும் முன் பாண்டிநாட்டுப் பகுதியிலிருந்து பாடியருளி யவை என்பதும், இவ்விருபதிகங்களும் கயிலை சென்று வந்த பின் திருவாலங்காட்டிலிருந்து இறைவன் திருமுன்பு பாடியருளியவை என்பதும் விளங்குகின்றன. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பெருக்கெடுத்த கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமான், 'அம்மையே' என இனிய மொழியால் அழைத்த ருளப் பெற்றாரை, அப்பெருமான் மகிழ்ந்தாடும் திருக்கூத்தில் எடுத்தருளுகின்ற திருவடிக்கீழ் என்றும் இருக்கின்றாரைப், பொருந் திய பெருஞ் சிறப்பினை எடுத்துப் போற்றும் செயல் எவருடைய அறிவில் அடங்கும்? ஒருவர் அறிவிலும் அடங்காது.

குறிப்புரை: அம்மையாரின் சிறப்பு எவராலும் எடுத்துப் போற் றற்கரியது எனவே அந்நிலை தமக்கும் பொருந்துமாறு காட்டினார் ஆசிரியர்.

முதலும் முடிவும் இல்லாத இறைவன் அருட்கூத்து இயற்றும் பொழுது, அவர் திருவடிக்கீழிருந்து பண்ணமைந்த பாடல் களைப் பாடிமகிழும் அம்மையாரின் ஒளி விளங்கும் மலரனைய திருவடிகளை வணங்கிக், குளிர்ந்த நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திங்களூரில் வாழும் அப்பூதியாராம் ஞானப் பெருமுனிவர் செய்த திருத்தொண்டினை இனிச் சொல்லத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை: பாதம் - ஞானம். ஞானமே வடிவாய முனிவர் என்பதாம்.


This page was last modified on Sun, 24 Dec 2023 19:05:54 +0000
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/naayanmaar_history.php?&pathigam_no=12.240&naayanmaar=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&lang=tibetian&period=300-600&puja_month=Panguni&puja_star=Swathi;